செய்திகள்
இளங்குமரன் எம்.பியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

Jan 16, 2026 - 03:47 PM -

0

இளங்குமரன் எம்.பியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

எதிர்வரும் 20 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2025.11.29 அன்று நிலவிய வெள்ள அனர்த்தம் காரணமாக, பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களுக்குச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியின்றி உணவு வழங்க முற்பட்ட போது, அதனை தடுத்த கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, கிராம அலுவலரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு 2025.12.02 அன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அன்று குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக 2025.12.16 அன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை இன்றைய தினம் (01) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இன்று பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிராம அலுவலர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார். எனினும், பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. 

அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும், இன்றைய தினம் ஜனாதிபதியின் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதால் அவரால் நீதிமன்றிற்கு வரமுடியவில்லை என்றும் தெரிவித்தார். 

இதன்போது கிராம அலுவலர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் நீதிமன்றத் தவணையின் போது நேரில் முன்னிலையாக வேண்டியது கட்டாயமாகும் என்றும், அவ்வாறு முன்னிலையாகாமல் சட்டத்தரணியை மட்டும் அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் சுட்டிக்காட்டினார். 

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பதில் நீதவான், வழக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவித்தார்.

--

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05