Jan 16, 2026 - 05:23 PM -
0
பங்களாதேஷிற்கு எதிரான விளையாட்டு உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளார். பங்களாதேஷில் சமீபத்தில் இந்து சமூகத்தினர் மீது நடந்த தாக்குதல்கள் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இந்தியாவில் உள்ள இந்து அமைப்பினர், பங்களாதேஷ் வீரர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக விளையாட தேர்வாகி இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, இந்தியாவுக்கு டி20 உலக கிண்ண தொடரில் வந்து விளையாட பங்களாதேஷ் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து மனோஜ் திவாரி தெரிவிக்கையில்,
"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று நான் கூறியிருந்தேன். அரசு அனுமதித்திருந்தாலும், என் கருத்து அப்போதும் இப்போதும் ஒன்றுதான், இதுபோன்ற போட்டிகள் நடக்கக்கூடாது," என்று அவர் குறிப்பிட்டார்.
எந்த ஒரு நாட்டிலும், அது பங்களாதேஷ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அல்லது வேறு எங்கிருந்தாலும், ஒரு இந்தியர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டால், அந்த நாட்டுடன் இந்தியா விளையாட்டு உறவுகளை வைத்திருக்கக் கூடாது," என திவாரி தெரிவித்தார்.
இத்தகைய தீவிரமான விஷயங்களுடன் விளையாட்டைக் கலக்கக்கூடாது. ஆனால், முன்பு பாகிஸ்தானுடன் போட்டிகள் அனுமதிக்கப்பட்டதால், இந்த ஆட்டங்களும் தொடரும். என் தனிப்பட்ட கருத்து மிகத் தெளிவாக உள்ளது, அவர்கள் விளையாடக்கூடாது என்று அவர் கூறினார்.
முன்னதாக, பங்களாதேஷின் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல்,
இந்தியாவில் டி20 உலகக் கிண்ணத்தை விளையாடுவதற்கு 'சூழல் இல்லை' என்று வாதிட்டார். எனினும், பங்களாதேஷ் இந்தியாவில் திட்டமிடப்பட்ட டி20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்க முடியாது என முடிவு செய்யவில்லை.
இந்தியாவில் நடக்கும் போட்டிக்கு பங்களாதேஷ் வீரர்களுக்கு பெரிய அளவு அச்சுறுத்தல் இல்லை என்று ஐசிசி ஆய்வு குழு தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் பங்களாதேஷிற்கு எதிரான போட்டிகளை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

