Jan 16, 2026 - 11:55 PM -
0
மனித பாவனைக்கு உதவாத 2,447 டின் மீன்களை அழிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவை அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி கொஸ்கம பிரதேசத்தில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, தரமற்ற இந்த டின் மீன் தொகை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோரை ஏமாற்றும் வகையில் லேபிள்கள் இன்றியோ அல்லது லேபிள்கள் அகற்றப்பட்டோ டின் மீன்களை களஞ்சியப்படுத்தியமை, SLS தரச் சான்றிதழ் இல்லாமை மற்றும் உரிய பில்களை வைத்திருக்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (16) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட வர்த்தகர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அவருக்கு 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

