Jan 17, 2026 - 06:36 AM -
0
மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெறுகிறது.
இதற்காக அலங்காநல்லூரில் கடந்த ஒருமாதமாக ஏற்பாடுகள் நடந்தன. வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரி, பாதுகாப்பு வசதிகள் போன்றவை செய்யப்பட்டு உள்ளன.
அலங்காநல்லூரில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் மதுரை வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 6,500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் சிறந்த 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
போட்டியில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்படுகிறது. 2-ம் பரிசு பெறும் மாடுபிடி வீரர், காளைகளுக்கு பைக்குகளும் பரிசாக வழங்கப்பட உள்ளன.
இதைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் பதிவு செய்துள்ளனர்.
தென் மண்டல ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

