Jan 17, 2026 - 01:47 PM -
0
இந்திய அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கத் தயாராகி வரும் நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நெட்பிளிக்ஸில் (Netflix) வெளியாகியுள்ள ஒரு புதிய வெப் சீரிஸில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்று, ஹர்திக் பாண்டியாவின் பழைய விமான நிலைய சர்ச்சையை மீண்டும் வௌிப்படுத்தியுள்ளது.
தனது திறமை மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் பாண்டியா, இம்முறை ஒரு கிரைம் திரில்லர் சீரிஸ் மூலம் விவாதப் பொருளாகியுள்ளார்.
நெட்பிளிக்ஸில் சமீபத்தில் "டாஸ்கரி: தி ஸ்மக்லர்ஸ் வெப்" (Taskaree: The Smuggler's Web) என்ற வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. மும்பை விமான நிலைய சுங்கத்துறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடரில், இம்ரான் ஹாஷ்மி கஸ்டம்ஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தத் தொடரின் கதை முழுவதும் கற்பனை என்று இயக்குநர்கள் தெரிவித்தாலும், 5 ஆவது எபிசோடில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சி ரசிகர்களைப் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
அந்த காட்சியில், ரோம் நகரிலிருந்து வரும் ஒரு 'ஐபிஎல் சூப்பர் ஸ்டார்', கோடிக்கணக்கான மதிப்புள்ள சொகுசு வாட்சுகளுடன் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் சிக்குவது போலக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் காட்சியைப் பார்த்ததும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், 'இது ஹர்திக் பாண்டியாவுக்கு நடந்தது போல் இருக்கே" என்று விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்தை முடிந்து துபாயிலிருந்து மும்பை திரும்பியபோது, ஹர்திக் பாண்டியாவைச் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரிடமிருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்தச் சமயத்தில் ஹர்திக் பாண்டியா அந்தத் தகவலை முற்றிலும் மறுத்திருந்தார். "நான் சட்டத்தை மதிப்பவன். நானாகவே முன்வந்து வாட்சுக்கான விவரங்களைத் தெரிவித்தேன். அது 5 கோடி அல்ல, 1.5 கோடி மதிப்புடையது. அதற்கான வரியைக் கட்டத் தயாராக இருக்கிறேன் என்று நானே சொன்னேன்" எனத் தெளிவான விளக்கம் அளித்திருந்தார்.
அந்த சர்ச்சை முடிந்து 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள வெப் சீரிஸ் அந்தக் காயத்தை மீண்டும் கீறியுள்ளது. ஜனவரி 21 ஆம் திகதி நாக்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில், பாண்டியா தேவையில்லாத சர்ச்சையில் சிக்கியமை பேச்சு பொருளாக மாறியுள்ளது.

