Jan 17, 2026 - 07:51 PM -
0
ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசாயவைக் கடந்து பெளத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றது வெறுப்பை அல்ல, அன்பையே என 'சர்வ ஜன அதிகாரம்' கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தொம்பே கப்புகொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதி நேற்று (16) யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
"ஒரு அரசியல்வாதி பௌத்த பிக்குகள் குறித்து விமர்சிப்பதைப் பார்த்தேன். எம்முடைய பிக்குகள் மற்றும் அவர்கள் செய்யும் தியாகங்கள் பற்றி அவருக்கு என்ன தெரியும்? எம்முடைய மக்கள் நாகதீபத்திற்குச் சென்றது ருவன்வெலிசாய மற்றும் ஸ்ரீ மகா போதியைக் கடந்து வெறுப்பால் அல்ல, அன்பினாலேயே. வடக்குக்குக் கொண்டு செல்லப்பட்டது வெறுப்பு அல்ல, அன்பு மட்டுமே.
யாழ்தேவி ரயிலில் பயணிக்குமாறு அந்த நபர்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். அந்த ரயிலில் பயணிக்கும் போது எமது மக்கள் யாழ்ப்பாண மக்களுடன் எவ்வளவு நட்பாக உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் பாருங்கள். குறிப்பாகப் புனித யாத்திரை செல்பவர்கள் மற்றும் நாகதீபத்திற்குச் செல்பவர்களிடம் எவ்வளவு அன்பு இருக்கின்றது?
நாகதீப விகாரையின் விகாராதிபதி எமது நண்பர். பௌத்த தர்மத்தின் படி எவ்வளவு அன்பு பகிரப்படுகிறது என்பதை அவர் அறிவார். பிறப்பினால் யாரும் தாழ்ந்தவரோ அல்லது உயர்ந்தவரோ ஆவதில்லை எனில், சிங்களவர் அல்லது தமிழர் என்ற வேறுபாடு பிறப்பினால் ஏற்படுவதாக எமது தர்மம் கூறவில்லை.
இது ஒரு உலகளாவிய தர்மம். மைத்திரியைப் பரப்பும் தர்மம். இதில் வெறுப்புக்கு எங்கும் இடமில்லை. ஜனாதிபதி தனது வன்மமான இந்தக் கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இது ஒரு வெறுப்புப் பேச்சு மற்றும் இனவாதக் கருத்தாகும். இக்கருத்தைத் திரும்பப் பெற்று, மன்னிப்புக் கோரி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது. அவர் அந்த கடமையை உடனடியாக நிறைவேற்றுவார் என நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

