Jan 18, 2026 - 09:26 AM -
0
ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக வாழ்க்கைச் செலவு சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கத்திற்கும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் எதிராக பொதுமக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
ஈரானில் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம், தற்போது ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தும் போராட்டமாக உருவெடுத்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.
போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் மற்றும் அரச கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3,000-ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்திற்கொண்டு, அங்கு தங்கியுள்ள இந்தியப் பிரஜைகள் அனைவரும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, ஈரானில் தங்கியிருந்த மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவிலான இந்தியர்கள் அவசர அவசரமாக நாடு திரும்பி வருகின்றனர்.
ஈரானில் இணையச் சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டதால் வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, செய்திகளை அறிந்துகொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும், ஈரானிலுள்ள இந்தியத் தூதரகம் தமக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் பயண வசதிகளைச் செய்து கொடுத்ததாக அவர்கள் நன்றியுடன் தெரிவித்தனர்.

