கிழக்கு
ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கிறோம்!

Jan 19, 2026 - 10:23 AM -

0

ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கிறோம்!

எங்களிடம் இனவாதமில்லையென்று ஜனாதிபதி கூறுகின்றபோதிலும் அதற்கு மாறான செயற்பாடுகளே வடகிழக்கில் நடைபெறுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். 

கல்வி சீர்திருத்தம் முக்கியமாக கருதப்படுகின்றபோதிலும் சமூகக்கல்வி பாட புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்ட தமிழர்களின் வரலாறுகள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்பதே தமதுகோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார். 

நேற்று (18) களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலே ஏதோவொரு நம்பிக்கையின் அடிப்படையில் மறைந்த எமது தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் அடுத்த பொங்கலுக்கிடையில் தீர்வு கிடைக்கும், அடுத்த தீபாவளிக்கிடையில் தீர்வு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லக்கூடிய விதத்திலே தமிழர்களின் அரசியல் நிலவரம் இருந்தது. 

பலர் அது தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்தார்கள், பகிடியாக பேசினார்கள். இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விடயம் என்னவெனில் எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் நிரந்தரமான கௌரவமானதொரு அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்தக் காலத்தில் அரசியலில் ஈடுபட்டார். 

எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு பாராளுமன்றம் ஒரு அரசியற்பேரவையாக மாற்றப்பட்டு அரசியல் அமைப்பினுடைய ஒரு வரைவு வேலை ஆரம்பிக்கப்பட்டு இடைக்கால வரைவொன்று உருவாகி அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இப்படியாக பல முன்னேற்றங்கள் நடந்தன. அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

எமது காணிகள் விடுவிக்கப்பட்டன, காணாமல் ஆக்கப்பட்டோர் பொறுப்புக் கூறல் விடயத்தில் நாங்கள் முழுமையாக இணங்காவிட்டாலும் அரசாங்கம் ஏதாவது செயற்பாடுகளை முன்னெடுத்தது. அந்த அடிப்படையில் 2016,2017,2018 ஆம் ஆண்டுகளில் சம்பந்தன் ஐயா தீபாவளிக்கு தீர்வு வரும், பொங்கலுக்குத் தீர்வு வரும் எனக்கூறியது தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை தரக்கூடிய வகையில் செயற்பாடுகள் இருந்தது. 

ஆனால் துரதிஷ்டவசமாக இன்று 2026 ஆம் ஆண்டு தைபிறக்கும்பொழுது தமிழ் மக்களுடைய நிரந்தரமான அரசியல் தீர்வைப்பற்றி நம்பிக்கையுடன் இருக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் இல்லை என்பதை மனவருத்தத்துடன் கூறவேண்டியுள்ளது. இன்னும் ஆறேழு மாதங்களில் ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிவிடும். 

அதற்கிடையில் அரசியற்கைதிகள் எவரும் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. 

ஜனாதிபதியுடனான உரையாடல்களிலிருந்தும் பாதுகாப்புத் தரப்பினருடனான உரையாடல்களிலிருந்தும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. 

காணிவிடுவிப்பு தொடர்பில் நாங்கள் பேசியபோதும் எந்த இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. இன்று வரை சில பாதைகள் மாத்திரம் திறக்கப்பட்டு அவற்றைக்கூட 7.00 மணிக்குப்பிறகு பயன்படுத்த முடியாத நிலை மயிலிட்டி போன்ற பிரதேசங்களில் உள்ளது. 

அதேபோல், மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டங்களில் கூட என்னால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் முப்பத்துநான்கு விடயங்களில் வனஇலாகாவுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள், மகாவலி, தொல்பொருள் தொடர்பான விடயங்கள் ஒன்றரை வருடங்களாக கூட்டங்கள் நடைபெற்றும் எந்த முன்னேற்றங்களுமில்லை. காணொளிகளை பார்த்தால் தெரியும் மகாவலி தொடர்பில் போன கூட்டத்தில் இணக்கப்பாடு இருக்கின்றது என்கின்றார்கள், இந்தக்கூட்டத்திலே புதிய அதிகாரிகள் வந்து இணக்கப்பாடு இல்லை என்கின்றார்கள். 

பெரும்பான்மை சமூகத்தினரால் எமது மேய்ச்சற்தரைகள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோதமாக அவர்கள் குடியேறியபோது அவர்களுக்கு நிரந்தரமாக அந்தக் காணிகளை கொடுக்கவேண்டுமென கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில்கூட தீர்மானங்களை எடுக்கவில்லை. 

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்த பிறகு வனஇலாகாவினால் அத்துமீறி கெவிலியாமடுவில் எமது மேய்ச்சற்தரைகளில் குடியேறியிருக்கின்ற பெரும்பான்மை சகோதரர்களுக்கு அந்தக் காணிகளை விடுவிக்குமாறு தீர்மானம் எடுக்கப்படுகின்றது. 

தொல்பொருள் சம்பந்தமாக நாங்கள் ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டோம். அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குசனார்மலைக்கு வந்தபோது அவரது வழியை மறித்து நடையிலே திருப்பியனுப்பினோம். 

ஆனால் இந்த அரசாங்கம் வந்தபிறகு தமிழ் அதிகாரிகளை நியமத்து அவர்களை வைத்து எங்களின் அறுநூறுக்கும் அதிகமான பகுதிகளை தங்களின் கைவசம் எடுப்பதற்காக எங்களுடைய தவிசாளர்களையும் பொதுமக்களையும் நீதிமன்றத்தின்முன் நிறுத்துகின்றார்கள். 

இப்படியான நிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டுவந்து அதன்மூலம் எமது கருத்துச் சுதந்திரம் என்ன நிலைக்கு செல்லப்போகின்றது என்பது தெரியவில்லை. நல்லாட்சி ஆட்சிக்காலத்திலாவது சம்பந்தன் ஐயா பொங்கலுக்குள் தீர்வு வருமென்று சொல்லக்கூடிய நிலையிருந்தது. 

ஆனால் இந்த அரசாங்கத்திலே தமிழ் மக்களைப் பொருத்தவரையிலே சில கருத்துகளை நாங்கள் வரவேற்க வேண்டும். 

அண்மையில் ஜனாதிபதி அனுராதபுரத்தில் இருக்கும் ஸ்ரீ மகாபோதியைத் தாண்டி பூரணை தினத்தில் தையிட்டிக்கு வந்து வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என்ற கருத்தை யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியிருக்கின்றார். அக்கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம். விகாராதிபதிகளைப்பார்த்து பயப்படாமல் அவர் அந்தக் கருத்தை கூறியிருக்கின்றார். 

அவர் அந்த மேடையில் நின்று எல்லோருக்கும் சமனான வாழ்வு, சமனாக எல்லோரையும் பார்ப்போம் என்று கூறுகின்றாரே தவிர நடைமுறையில் அந்த விடயங்களை காணக்கூடியதாக இல்லை. அவருடைய நடையை மாத்திரம் தான் காணக்கூடியதாக இருக்கின்றது. பூரணை தினத்தில் தையிட்டிக்கு வந்து வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் என சொல்கின்றார் ஆனால் அந்த தையிட்டி விகாரை சட்டவிரோதமாக கட்டப்பட்டது. 

தொடர்பில் நடவடிக்கை எடுப்பது பற்றி தெரியவில்லை. திருகோணமலையில் நடந்த சம்பவம் பிழையென்று கூறுகின்றார் ஆனால் இன்றுவரை அந்த சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர்சிலை அவ்விடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. 

நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாகவோ எதிராகவோ கருத்து வெளியிடுவது எமது மக்களுக்காகவே தவிர எங்களுடைய தேவைக்காக அல்ல. எமது தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்காக இந்த ஆண்டிலும் எமது முழுமையாக அழுத்தங்களை கொடுத்து மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுத்து தமிழ் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், நிரந்தரமாக அரசியல் தீர்வையும் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்காகவும் இலங்கை தமிழரசுக் கட்சி மாத்திரம்தான் தமிழ் மக்களின் சார்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05