Jan 19, 2026 - 11:19 AM -
0
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லியைப்பூ வனப்பாதுகாப்பு பிரிவில் நேற்று (18) இனந்தெரியாத நபர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக, பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தத் தீப்பரவல் காரணமாக இலங்கைக்குக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் அழிவடைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மலையகப்பகுதியில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை மற்றும் கடும் காற்று காரணமாக தீ வேகமாகப் பரவியுள்ளது. இதனால் தீயினைத் தணிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக பாதுகாப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
எனினும், இரவு வேளையில் ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக தற்போது தீ தானாகவே கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
பொழுதுபோக்கிற்காகவோ, விலங்குகளை வேட்டையாடுவதற்காகவோ அல்லது விறகு சேகரிப்பதற்காவோ மர்ம நபர்களால் இத்தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மலையகப்பகுதியில் வரட்சியான காலங்களில் காடுகளுக்குத் தீ வைக்கப்படுவதனால், நீரூற்றுக்கள் வற்றிப்போய்க் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே, இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--

