Jan 20, 2026 - 10:20 AM -
0
பதிலீடுகளற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் முல்லைத்தீவு மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளதாக ஆளுங்கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினருமான செ.திலகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட பிரஜாசக்தி வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (19) ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் செல்லுமிடமெங்கும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக பெற்றோர்கள் தொடர்ச்சியாக முறையிடுகிறார்கள், கடந்த வருடம் வன்னி மாவட்டத்திலிருந்து ஆசிரியர்கள், யாழ். மாவட்டத்திற்கு பதிலீட்டில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, அங்கே பெரும் தவறு நடந்துள்ளது
வன்னி மாவட்டத்திலிருந்து ஆசிரியர்களை யாழ். மாவட்டத்திற்கு அனுப்பிய பின்னர் வன்னி மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்காமல் ஏமாற்று நாடகம் நடந்துள்ளது. இதனை சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் வன்னி மாவட்டத்திற்கு ஆசிரியர்களை வழங்கிய பின்னரே யாழ். மாவட்டத்திற்கு எடுத்திருக்கவேண்டும் எனவும், இது தவறான செயற்பாடு எனவும், தவறு செய்தவர்கள் குற்றவாளிகள் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இவ்வாறான குற்றவாளிகள் வடக்கு மாகாணத்திலிருந்து எமது வன்னிப் பிரதேசத்தின் கல்வியையும் வடக்கு மாகாணத்தின் கல்வியையும் சீரழித்துக் கொண்டிருக்கும் செயற்ப்பாடு கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது
எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது செய்வதற்கு பிரஜாசக்தி வறுமை ஒழிப்பின் சமூக அபிவிருத்தி தலைவர்களை நியமிப்பதன் ஊடாகவும், பல்வேறு குழுக்களை அமைப்பதன் ஊடாகவும், பல புத்திஜீவிகளை கொண்ட அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் இவ்வாறான தவறுகளை எமது மண்ணில் இடம்பெறாது மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் ஆரம்ப பணியாகவே இன்று பிரஜாசக்தியினுடைய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் குறித்த நியனம் ஊடாக பாரிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை செவ்வனே செய்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வீர்கள் என தெரிவித்தார்.
--

