Jan 20, 2026 - 04:04 PM -
0
ராஜகிரய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் 4,074 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் 06 உப-திட்டங்களில் ஒன்றாக, இந்த ராஜகிரய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தை வீடமைப்புத் திட்டம் காணப்படுகிறது.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி 2020-03-04 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த திட்டத்தின் முந்தைய ஒப்பந்தக்காரரின் பலவீனமான செயற்பாடு காரணமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக தகுதியான ஒப்பந்தக்காரரைத் தெரிவு செய்ய தேசிய போட்டி விலைமனு கோரல் முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட 06 விலைமனுக்களை ஆராய்ந்த உயர் மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கமைய, இந்த 300 வீட்டு அலகுகள் நிர்மாணத் திட்டத்தை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

