Jan 20, 2026 - 04:40 PM -
0
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், சில தரப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும், எனவே இது குறித்து அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சை நிலைமை குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக, தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் உட்பட மேலும் இருவர் தற்போது கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
கல்விச் சீர்திருத்தங்கள் நிறுத்தப்படவில்லை என்றும், அது தொடர்பான ஏனைய அனைத்துப் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறிய அமைச்சர், முதலாம் தரத்திற்குரிய கல்விச் சீர்திருத்தங்கள் எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், 6 ஆம் தரத்திற்குரிய புதிய பாடத்திட்டத்தை அமுல்படுத்துவது மாத்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் காலப்பகுதிக்குள் இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத்தி நிலவும் வதந்திகளையும் குழப்பங்களையும் நீக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"எதிர்க்கட்சித் தரப்பினர் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். ஒரு தலைமுறையையே கல்வியின் ஊடாக மாற்றி, நாட்டின் தேசிய அபிவிருத்திக்குப் பங்களிக்கச் செய்யும் இவ்வாறான பாரிய சீர்திருத்தத்தை, ஒரு சிறு குழுவினரின் சந்தேகங்களுக்கு மத்தியில் முன்னெடுக்க முடியாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. எனவே, இது குறித்து மக்களைத் தெளிவுபடுத்தவும் உரிய தரப்பினருடன் முறையான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் திகதிகளையும் நாம் ஒதுக்கியுள்ளோம். இந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அதற்கு முகங்கொடுக்க நாம் தயார். ஆனால் இன்றுவரை அந்தப் பிரேரணை கையளிக்கப்படவில்லை. ஒருவேளை அவர்கள் அதனைச் சமர்ப்பிக்காவிடின், அரசாங்கத்தின் சார்பில் நாமே இந்த வியாழக்கிழமை கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தைக் கொண்டுவந்து அனைத்துச் சந்தேகங்களையும் தீர்க்கத் தீர்மானித்துள்ளோம்."

