செய்திகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி வேட்டை!

Jan 20, 2026 - 09:16 PM -

0

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி வேட்டை!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (20) நடைபெற்றது.

 

மக்களை மையமாகக் கொண்ட சட்ட அமுலாக்கத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, விசேட விசாரணைப் பிரிவின் இதுவரை பெற்றுக்கொண்ட முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

கடந்த 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில், விசேட விசாரணைப் பிரிவு வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மிகவும் சாதகமான முடிவுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சரிடம் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

 

அந்த ஆண்டில் மொத்தம் 4,822 பொது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், முறையான விசாரணைகள் மூலம் 2,914 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

 

மேலும் சில முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றங்களில் 772 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளைத் தொடர்ந்து 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கமளித்தனர்.

 

சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பான குற்றங்களுக்கு எதிராக 21 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளர்களுக்கு 380 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 

 

அத்துடன், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்ட 15 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டது.

 

2025 செப்டம்பர் 22 அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் நிறுவப்பட்ட பிரத்யேக பொலிஸ் பிரிவு காரணமாக, விசாரணைகள் மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுவடைந்து வேகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05