Jan 23, 2026 - 04:14 PM -
0
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணிக்கு அருகிலுள்ள சல்லித் தோப்பு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் படகில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த 1,600 கிலோ பீடி இலை மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் படகு ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், தனுஷ்கோடி கடல் வழியாக கஞ்சா, கடல் அட்டை, சமையல் மஞ்சள், பீடி இலைகள், ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தடுப்பதற்காக இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் கடற்படையினர் மற்றும் கடலோரப் பகுதிகளில் மத்திய, மாநில உளவுத்துறையினர், மரைன் பொலிஸார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்புல்லாணி சல்லித் தோப்பு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக திருப்புல்லாணி காவல் ஆய்வாளருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, இன்று (23) வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில், காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு பொலிஸார் அப்பகுதியில் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு வாகனத்திலிருந்து படகிற்கு பீடி இலை மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்களை பொலிஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இதன்போது 37 மூடைகளில் இருந்த 1,600 கிலோ பீடி இலைகள், ஒரு சரக்கு வாகனம் மற்றும் ஒரு பைபர் படகு ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மூவரை கைது செய்த பொலிஸார், அவர்களை திருப்புல்லாணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்குப் பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், படகு மற்றும் பீடி இலை மூடைகள் ஆகியன கீழக்கரை சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
--

