Jan 23, 2026 - 07:04 PM -
0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேற்புறமாக அமைந்துள்ள சிவனொளிபாதமலை வனப் பாதுகாப்பு வலயத்திற்குள், கால்வாய் ஒன்றுக்கு அருகில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த நபரொருவர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குழுவொன்று குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்து, ஒன்றரை நாட்கள் அங்கேயே தங்கி மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இந்தச் சுற்றிவளைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மதுபான உற்பத்திக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 210 லீட்டர் கோடா அவ்விடத்திலேயே அழிக்கப்பட்டதுடன், 1500 மில்லிலீட்டர் ஸ்பிரிட் மற்றும் மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே தோட்டத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
--

