Jan 29, 2026 - 02:29 PM -
0
2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நாடளாவிய ரீதியில் கோலாகலமாக நடைபெற்றது.
அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைய, முதலாம் தரத்திற்குரிய புதிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, மலையகப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் தரம் 01 மாணவர்களைப் பாடசாலைக்கு உள்வாங்கும் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அந்தவகையில், ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல. 01 தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் திரு. எஸ். விஸ்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய மாணவர்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு புதிய மாணவர்களை வாழ்த்தி வரவேற்றனர்.
--

