Jan 30, 2026 - 10:25 AM -
0
கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு (SMEs) மிகப்பெரிய கடன் வழங்குநராகத் தனது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், உலக வங்கிக் குழுமத்தின் உறுப்பினரான சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்துடன் (IFC) பங்குடைமை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் SMEs- பிரிவினருக்கு கடன் வழங்கும் வங்கியின் திறனை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்துகிறது.
இந்த பங்குடைமையின் கீழ், கொமர்ஷல் வங்கி வழங்கவுள்ள 60 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 18.5 பில்லியனுக்கு மேல் சமமான) புதிய SME கடன்களுக்கு IFC இடர் காப்புறுதியை வழங்கவுள்ளது. கடன் இடரின் 50%-ஐ IFC ஏற்றுக் கொள்வதன் மூலம், வங்கி தனது கடன் வழங்கும் திறனை நிலைத்த முறையில் விரிவுபடுத்துவதோடு, இலங்கையின் முன்னணி SME கடன் வழங்குநராக தனது நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. முக்கிய துறைகளில் உருவாகி வரும் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை பொருளாதார மீட்பை ஒருங்கிணைத்து வரும் இந்நேரத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடர் பகிர்வு வசதியானது (Risk Sharing Facility – RSF), பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கும் விவசாய வர்த்தகங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும். இந்த குறிக்கோளுடனான அணுகுமுறை, நிதி உட்புகுத்தலை நேரடியாக ஊக்குவிப்பதுடன், இலங்கையின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் பொருளாதார விரிவாக்கத்திற்கும் அவசியமான உற்பத்தித் துறைகளை வலுப்படுத்துகிறது என வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஒத்துழைப்பைப் பற்றி கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கருத்து தெரிவிக்கையில்: IFC உடன் இணைந்து உருவாக்கிய இந்த இடர் பகிர்வு வசதி, இலங்கையின் SME துறைக்கு கொமர்ஷல் வங்கி நீண்டகாலமாக வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பின் மீதான வலுவான நம்பிக்கையாகும். நாட்டின் நெருக்கடிக்குப் பிந்தைய மீட்பு பயணத்தில், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் மீண்டும் எழுந்து, மாற்றங்களை ஏற்று வளர்வதற்காக தொடர்ச்சியான கடன் அணுகல் மிக அவசியமாகும். இந்த கூட்டாண்மை, எங்கள் கடன் வழங்கும் திறனை பொறுப்புடன் விரிவுபடுத்துவதோடு, உள்ளடக்கமான மற்றும் நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பெண்கள் தலைமையிலான SMEக்கள் (WSMEs) மற்றும் விவசாயத் துறை போன்ற வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்க உதவுகிறது.
மேலும் அவர், இந்த முயற்சி வங்கியின் நோக்கம் சார்ந்த SME மூலோபாயத்துடன் உறுதியாக இணைந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக, கொமர்ஷல் வங்கி இலங்கையில் SMEக்களுக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராக இருந்து வருகிறது ஏனெனில், இந்த நிறுவனங்களை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நாங்கள் கருதுகிறோம். அபாயத்தைப் பகிர்ந்து கொண்டு, புதிய நிதி வாய்ப்புகளை ஏற்படுத்த IFC உடன் இணைந்து செயல்படுவதன் மூலம், வேலை வாய்ப்புகளை உருவாக்கும், சமூகங்களை நிலைநிறுத்தும் மற்றும் தேசிய வளர்ச்சியை முன்னெடுக்கும் தொழில்முனைவோர்களுடன் நாம் எமது திறனை மேலும் வலுப்படுத்துகிறோம்.
IFC நிதி நிறுவனங்கள் குழுவின் – ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத் தொழில்துறைப்பணிப்பாளரான திரு. அலன் ஃபோர்லெமு தெரிவிக்கையில் இந்த பங்குடைமை மிகவும் அவசியமான இடங்களில் நிதி அணுகலை வலுப்படுத்த IFC கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. தொழில்முனைவோருக்கு தமது வளங்களை வெற்றிகரமான நிறுவனங்களாக மாற்ற தேவையான கருவிகள் கிடைக்கும் போது தான் உண்மையான பொருளாதார முன்னேற்றம் நிகழ்கிறது. கொமர்ஷல் வங்கியுடன் இந்த ஒத்துழைப்பின் மூலம், நிதி இடைவெளியை நிரப்பவும், இலங்கை முழுவதும் உள்ள சிறிய தொழில்களுக்கு நிதி வழங்கும் திறனை விரிவுபடுத்தவும் நோக்கமுடைய தீர்வுகளை வழங்க விரும்புகிறோம். எங்கள் இலக்கு ஒரு அலைவீச்சு விளைவை உருவாக்குவதாகும்: இந்த நிறுவனங்கள் வெற்றி பெறும்போது, அவை வேலை வாய்ப்புகளை உருவாக்கும், குடும்பங்களை ஆதரிக்கும் மற்றும் மேலும் உள்ளடக்கமான எதிர்காலத்தை கட்டியெழுப்பும்.
இந்த சமீபத்திய முயற்சியானது, கொமர்ஷல் வங்கியுடன் IFC கொண்டிருக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேலான பங்குடைமையைத் தொடர்ந்து, SME வளர்ச்சியும் பொருளாதார நிலைத்தன்மையும் மேம்பட உதவுகிறது – இது உலக வங்கி குழுமத்தின் நோக்கத்துடன் முழுமையாக இணைந்ததோடு, தேசிய வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் ஆதரவளிக்கிறது.' கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

