Jan 30, 2026 - 10:51 AM -
0
மட்டக்களப்பு மாவட்டத்தில் 48 வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடு 2,534 மில்லியனுக்குரிய அந்த வேலை திட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (29) மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது கடந்த காலத்தில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும், கடந்த காலத்தில் இருந்த குறைபாடுகள் தொடர்பாகவும் ஆரம்பத்தில் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, வீதி புனரமைப்பு, மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற துறை சார்ந்த தேவைப்பாடுகள் அதன் குறைபாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டு தேவைப்பாடுகளை எதிர்வரும் காலங்களில் சீர் செய்வதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் குறைபாடுகள் கேட்டு அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டது.
சில துறை சார்ந்த விடயங்கள் பேசப்படுகின்ற போது வாத பிரதிவாதங்களும் ஏற்பட்டு பிரதேச அபிவிருத்தி குழு தலைவரினால் அதற்கான சிறந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு தோற்றம் பெற்ற வாத பிரதிவாதங்களை கட்டுப்படுத்தி சிறந்த முறையில் அந்தந்த துறைகளை எவ்வாறு விருத்தி செய்யலாம் என்பது தொடர்பாகவும் அதற்கான ஆலோசனைகளையும் இக்கூட்டத்தின் போது முன்வைத்தனர்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், திணைக்கள அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
இந்த வருடத்தின் முதலாவது ஒருங்கிணைப்பு கூட்டமாக இந்த பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டமாக இது அமைந்திருந்தது. கடந்த காலங்களில் இந்த பிரதேசத்தில் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு ஊடாக 121 மில்லியன் ரூபாய் வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்திருந்தோம். இன்று அந்த வேலைகள் அவ்வளவும் 100 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று எதிர்வரும் காலங்களில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கிராமிய வீதிகள் அபிவிருத்திக்காகவும் ஆர்.டி.ஏ ஊடாக 37.5 நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதேபோன்று நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 10.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன நிதி ஒதுக்கீடுகளை நாங்கள் வழங்கி இருக்கின்றோம் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பல லட்சம் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வேலைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு இருக்கின்றோம்.
அண்மையிலே இடம் பெற்ற டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குகின்ற வேலை திட்டத்தில் நாங்கள் பல லட்சம் ரூபாய்களை இந்த மக்களுக்கு நாங்கள் வழங்கியிருந்தோம். பல திட்டங்கள் இப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது அனைத்தும் இன்று நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம்.
எங்களது மட்டக்களப்பு மாவட்டம் ஒரு அபிவிருத்தி பாதையை நோக்கி முன்னேற்றிக் கொண்டிருக்கின்றது மாவட்ட ரீதியில் இருக்கின்ற அனைத்து துறைகளிலும் ஊடாக நாங்கள் அந்த வேலைகளை முன்னெடுக்கிறோம் சுகாதாரம் கல்வி நீர்ப்பாசனம் அதேபோன்று மீன்படி விவசாயம் என அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு இருக்கின்றது. இம்முறை இந்த மாவட்டம் அபிவிருத்தி பாதையில் முன்னோக்கி கொண்டு நடக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அதேபோன்று அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக கடந்த காலங்களில் கைவிடப்பட்ட பல வீடு திட்டங்களை நாங்கள் மீண்டும் முன் நகர்த்தியிருக்கிறோம். விசேடமாக ஜ-ரோட் எனப்படுகின்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற ஆர்.டீ.ஏ உடன் இணைந்து நாங்கள் முன்னெடுக்கின்ற அந்த வேலை திட்டமும் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பிரதேசங்களிலும் கைவிடப்பட்ட அந்த வீதி வேலை திட்டங்களையும் நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 48 வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கின்றது 2,534 மில்லியனுக்குரிய அந்த வேலை திட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மிக விரைவில் அந்த வேலை திட்டங்களையும் நாங்கள் பூர்த்தி செய்து மக்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.
--

