உலகம்
இந்தோனேசியாவில் ஷரியா சட்டத்தை மீறிய ஜோடிக்கு 140 கசையடிகள்

Jan 31, 2026 - 01:23 PM -

0

இந்தோனேசியாவில் ஷரியா சட்டத்தை மீறிய ஜோடிக்கு 140 கசையடிகள்

'ஷரியா' எனப்படும் இஸ்லாமிய மதச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட ஜோடி ஒன்றிற்கு 140 கசையடிகள் வழங்கித் தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் இந்தோனேசியாவில் பதிவாகியுள்ளது. 

குறித்த ஜோடி, திருமணத்திற்குப் புறம்பான உடலுறவு மற்றும் மது அருந்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். 

அச்சே (Aceh) மாகாணத்தில் இடம்பெற்ற கசையடி நிகழ்வின் போது அவர்கள் இருவரும் இந்தத் தண்டனைக்கு உள்ளாகினர். 

இதில் 21 வயதுடைய யுவதி ஒருவருக்குக் கசையடி வழங்கப்பட்டதுடன், அவர் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தண்டனையின் போதே மயக்கமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், அவர் அழுது கொண்டிருந்த போதும் தண்டனையை நிறைவேற்றிய பெண் அதிகாரிகள் இடைவிடாது கசையடிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. 

தண்டனை முடிவடைந்ததும் அவர் மயங்கி விழுந்த நிலையில், தண்டனை வழங்கப்பட்ட மேடையிலிருந்து அகற்றப்பட்டு உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டார். 

அச்சே மாகாணத்தின் இஸ்லாமிய குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், திருமணத்திற்குப் புறம்பான உடலுறவுக்கு 100 கசையடிகளும், மது அருந்துவதற்கு 40 கசையடிகளும் தண்டனையாக வழங்கப்படலாம். 

இவர்கள் இருவர் தவிர, ஷரியா சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இஸ்லாமிய பொலிஸ் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உட்பட மேலும் நால்வருக்குக் கசையடி வழங்கப்பட்டுள்ளது. 

மத ரீதியாகப் பழமைவாதமாக வாழும் அச்சே மாகாணத்தில், இஸ்லாமிய சட்டத்தை மீறுவோருக்குக் பகிரங்கமாகக் கசையடி வழங்குவது ஒரு பொதுவான தண்டனையாகும். 

எனினும், இது கொடூரமானது எனக் கூறி மனித உரிமைக் குழுக்கள் நீண்ட காலமாக இந்நடவடிக்கையை விமர்சித்து வருகின்றன. 

 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில், ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரே மாகாணம் அச்சே ஆகும். இங்கு பல குற்றங்களுக்குப் பகிரங்கமாகக் கசையடி வழங்கப்படுவது வழக்கமாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05