Feb 1, 2026 - 08:40 AM -
0
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பக்காலத்தில் எதிர்கொண்ட கசப்பான மற்றும் அதிர்ச்சியூட்டும் பாலியல் அத்துமீறல் சம்பவம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்திய பேட்டியொன்றில் தனது ஆரம்பகால அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், 'போட்டோஷூட்' என்ற பெயரில் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொல்லை குறித்து வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது:
"நான் சினிமாத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில், வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த போது ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் என்னை ஒரு போட்டோஷூட்டிற்காக அழைத்தார். அப்போது அவர் என்னிடம், 'நீ உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு வா, உன்னுடைய உடல் அமைப்பை நான் பார்க்க வேண்டும்' என மிகவும் அநாகரிகமான முறையில் கூறினார். போட்டோஷூட் என்ற பெயரில் அவர் என்னிடம் அத்துமீற முயன்றார்," எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், சினிமாத்துறையில் இருக்கும் இவ்வாறான தவறான அணுகுமுறைகள் குறித்தும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த வெளிப்படையான கருத்து தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

