செய்திகள்
குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் கூறுவதென்ன?

Feb 8, 2026 - 06:52 AM -

0

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும்  புதிய சட்டமூலம் கூறுவதென்ன?

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் ஊடாக வீட்டு உரிமையாளர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாக்கப்படுவதாகப் பல தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். 

எவ்வாறாயினும், இச்சட்டமூலம் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு அவசியமானது எனச் சட்டத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வீடுகள் மற்றும் ஏனைய இடங்களை வெளித் தரப்பினருக்கு வழங்குவது எந்தவொரு சமூகத்திலும் ஒரு சாதாரண செயற்பாடாகும். இதன்போது உரிமையாளர்களுக்கும் வாடகைக்கு பெறுபவர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தடுப்பதற்காக இந்தச் செயற்பாட்டிற்குச் சட்ட ரீதியான அடிப்படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க "குத்தகைக்கு விடப்பட்ட இடங்களின் உடமையை மீளப் பெறுவதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டம்" உட்படப் பல சட்டக் கட்டமைப்புகளைக் காணக்கூடியதாக உள்ளது. 

இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்துக் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. 

அதன் முன்னுரைக்கு அமைய, குடியிருப்பாளர்களைத் தன்னிச்சையாக வெளியேற்றுவதற்கு எதிராகச் சட்டப் பாதுகாப்பு முறையொன்றை அறிமுகப்படுத்துவதே இச்சட்டமூலத்தின் அடிப்படை நோக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இச்சட்டமூலம் ஒரு சாராரைப் பாதிக்கும் எனப் பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா இதனை 'பேயின் சட்டம்' (Devil's Law) என விமர்சித்துள்ளார். 

இச்சட்டமூலத்தின் 2 ஆவது பிரிவின் படி, யாதேனும் ஒரு இடத்தில் சட்டரீதியாகத் தங்கியிருக்கும், அதாவது குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்தின் கீழ் பிணைக்கப்பட்டுள்ள குத்தகைக்கு எடுத்தவர் அல்லது வாடகைக்கு குடியிருப்பவருக்கு இது பொருந்தும். 

அவர்களின் பாதுகாப்பிற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள இச்சட்டமூலத்திற்கு அமைய, குடியிருப்பாளருக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் வசதி, அத்தியாவசிய விநியோகம் அல்லது பயன்பாட்டுச் சேவையை இடைநிறுத்தல் அல்லது நிறுத்துதல், அத்தகைய சேவையைத் திருத்துதல் அல்லது உரிய நிலையில் பேணுவதை நிராகரித்தல் ஆகியவற்றை நில உரிமையாளர் செய்ய முடியாது. 

வீட்டின் உரிமையாளர் அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் ஒருவர், குடியிருப்பாளரை அவ்விடத்திலிருந்து வெளியேற்றுவதற்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேதம் விளைவித்தல், வெளியேறுவதற்குத் தூண்டுதல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது எனக் குறிப்பிட்டு, இதன் 4 ஆவது பிரிவின் ஊடாகக் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், நீதிமன்ற உத்தரவின்றி குடியிருப்பாளர் ஒருவரை அவ்விடத்திலிருந்து வெளியேற்றக் கூடாது என 5 ஆவது பிரிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இவ்வாறான செயற்பாடுகளுக்காக நில உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குக் குடியிருப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இச்சட்டமூலம் தொடர்பில் இதுவரையில் பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பல தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறான பின்னணியில், இச்சட்டமூலம் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05