Feb 8, 2026 - 09:08 AM -
0
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இளைஞன் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியில் கெக்கிராவ வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரதங்கடவல நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடந்த குறித்த பாதசாரிப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியில் 'மினிமரு சந்தி'க்கு அருகில், சியம்பலாண்டுவ நோக்கி மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் எதிரே வந்த முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மற்றுமொரு விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தல்கஸ்பிட்டிய, ஹபலன்காவ பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறி சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இறக்காமம் பொலிஸார் விசாரிக்கின்றனர்.
காலி - கொழும்பு பிரதான வீதியின் ரன்தொம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலபிட்டிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
அளுத்வல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

