Mar 2, 2026 - 09:54 PM -
0
இஸ்ரேல் தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி பெய்ரூட் உட்பட ஏனைய பகுதிகளில் தங்கியிருந்த 19 இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, அத தெரண வினவியபோது இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்த மோதல் தற்போது மிகவும் விரிவடைந்துள்ளது.
இன்று மாலை 'ரொய்ட்டர்ஸ்' செய்திச் சேவை வெளியிட்ட காணொளியில், பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுவது பதிவாகியுள்ளது.
அங்கு தொடர் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகையினால் சூழப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில் 31 பேர் உயிரிழந்துள்ளதோடு, 149 பேர் வரை காயமடைந்துள்ளதாக லெபனான் அரச செய்தி நிறுவனமான NNA தெரிவித்துள்ளது.

