Feb 11, 2025 - 12:44 PM -
0
முன்னணி தகவல் தொடர்பாடல் தொழினுட்ப கட்டமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் நிறுவனமான ஸ்ரீ லங்கா ரெலிகொம் (சேர்விசஸ்) லிமிடெட் (SLT-SERVICES), சமுர்த்தி வங்கியுடன் கைகோர்த்து, அதன் டிஜிட்டல் மாற்றியமைப்பு பணிகளை துரிதப்படுத்த முன்வந்துள்ளது. இந்த மூலோபாய கைகோர்ப்பினூடாக, SLT-SERVICES இனால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் வங்கியியல் மென்பொருள் தீர்வான “FinOps”, சமுர்த்தி வங்கியின் நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் 900 கிளைகளிலும் ஐந்தாண்டு காலப்பகுதியினுள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதனூடாக சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் நவீன டிஜிட்டல் மயப்படுத்தப்படும்.
FinOps டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்பை SLT-SERVICES இன் உள்ளக அணியினர் வடிவமைத்துள்ளதுடன், இலங்கையின் நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரத்தியேகமான சவால்கள் மற்றும் காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் தீர்வுகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நவீன கட்டமைப்பினூடாக, டிஜிட்டல் பகுதிகள், கள வசூலிப்பு செயற்பாடுகளுக்கான ஒப்பற்ற மொபைல் அப்ளிகேஷன் மற்றும் சுயமான பணிப்பாய்ச்சல்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்களை வழங்கும். அதன் உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு போன்றன பின்பற்றல் திறன் மற்றும் அளவீட்டுத்திறனை உறுதி செய்து, சமுர்த்தி வங்கியின் விரிவாக்கமடையும் செயற்பாடுகளுக்கு சிறந்த தீர்வாக அமைந்திருக்கும்.
FinOps நடைமுறைப்படுத்துவதனூடாக, சமுர்த்தி வங்கிக்கு மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்களை, பாவனையாளருக்கு நட்பான சாதனங்களை பயன்படுத்தி, தன்னியக்கமயப்படுத்தப்பட்ட செயன்முறைகளினூடாக, தகவல்களறிந்த தீர்மானமெடுத்தல்களினூடாக பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும். இந்த மேம்படுத்தல்களினூடாக, செயற்பாட்டு வினைத்திறன் எய்தப்படும் என்பதுடன், கிராமிய மற்றும் நகர சமூகங்களிடையே நம்பிக்கையை வென்ற நிதிப் பங்காளர் எனும் வங்கியின் நிலையை மேலும் உறுதி செய்யும்.
வளர்ச்சி மற்றும் உள்ளடக்கம் எனும் பகிரப்பட்ட நோக்கிற்கமைய, இலங்கையின் நிதியியல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தப் பங்காண்மையினூடாக, நவீன மயப்படுத்தப்பட்ட வங்கியியல் சேவைகளை தனது பரந்த வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பது, சமூகங்களுக்கு வலுவூட்டுவது மற்றும் தேசத்தின் பொருளாதார விருத்திக்கு பங்களிப்பு வழங்குவது போன்றன சமுர்த்தி வங்கியினால் மேற்கொள்ளப்படும்.
“எமது நிறுவனசார் தீர்வான FinOps டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்பு, உள்நாட்டு புத்தக்கத்தை வெளிப்படுத்துவதுடன், சிக்கல்கள் நிறைந்த சவால்களுக்கு தீர்வாக அமையும். சமுர்த்தி வங்கியின் டிஜிட்டல் வலுவூட்டப்பட்ட நிதிக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் நாம் கைகோர்ப்பதையிட்டு பெருமை கொள்வதுடன், முன்னணி தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனர் எனும் வகையில், எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சகாயமான விலைகளில் நிலைபேறான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என SLT-SERVICES இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி அசேல சி.ஆர்.கலபத்திகே கூறினார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சி.டி.களுஆரச்சி சமுர்த்தி வங்கியின் சார்பாக கருத்துத் தெரிவிக்கையில், “SLT-SERVICES இனால் வடிவமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்பு என்பது, சமுர்த்தி திட்டத்தின் வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை பெருமளவு மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கும். அதன் பிரத்தியேகமான உள்ளம்சங்கள் மற்றும் அளவிடக்கூடிய தன்மை போன்றன அனுகூலம் பெறுவோரின் எதிர்பார்ப்புகளை வினைத்திறனான முறையில் நிவர்த்தி செய்வதற்கு வலுவூட்டும் என்பதுடன், உள்ளடக்கமான நிதிச் சேவைகளை நாடு முழுவதிலும் பெற்றுக் கொடுக்கும் எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்வதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.
உள்நாட்டு வளங்கள் மற்றும் ஆற்றல்களை பயன்படுத்துவதனூடாக, சமுர்த்தி வங்கியின் ஆற்றல்கள் மேலும் வலிமைப்படுவது மட்டுமன்றி, இலங்கையினுள் அந்நியச் செலாவணி இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கவும், உயர் தொழினுட்பத்திறன் வாய்ந்த, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, சகாயமான வங்கியியல் மென்பொருள் கட்டமைப்பை ஏற்படுத்தவும் முடிந்துள்ளது.
SLT-SERVICES பற்றி
ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் துணை நிறுவனமாக திகழும் SLT-SERVICES, Enterprise Networking, Data Center, Cloud Base Solutions, cybersecurity, மற்றும் customized Software Developments போன்ற புத்தாக்கமான சேவைகளை வழங்கும் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனராக திகழ்கின்றது. 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SLT- SERVICES, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, எதிர்காலத்துக்கு தயாரான FinOps, டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்புகள் போன்றவற்றை வழங்கி, நிறுவனங்களுக்கு வளர்ச்சியை நோக்கி பயணிக்கவும், வினைத்திறனான வகையில் இயங்கவும் பங்களிப்பு வழங்குகின்றது.
சமுர்த்தி வங்கி மற்றும் eSamurdhi பற்றி
அரச அமைப்பான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், சமூக சேவைகள் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றது. இலங்கையின் சமூக நலன்புரி கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றது. நாடு முழுவதையும் சேர்ந்த 1000க்கும் அதிகமான சமுர்த்தி வங்கி கிளை வலையமைப்பை இந்த திணைக்களம் மேற்பார்வை செய்கின்றது. இந்த வங்கியின் நோக்கம், குறைந்த வருமானமீட்டுவோரை தேசிய பொருளாதாரத்தில் உள்வாங்கி, நிலைபேறான சுபீட்சத்தை எய்துவதற்கு அவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவதாக அமைந்துள்ளது. செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தும் தொடர்ச்சியான செயற்பாடுகளில், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் E-Samurdhi செயற்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த புத்தாக்கமான செயற்பாடு, இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் (SASL) செயற்பாடுகளை நவீனமயப்படுத்தி மேம்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. E- Samurdhi திட்டத்தினால் பரந்த, மையப்படுத்தப்பட்ட தீர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனூடாக தேசிய மற்றும் உள்ளூர் சமுர்த்தி வங்கியியல் செயற்பாடுகளை சீரமைக்கப்படுகின்றது.
E-Samurdhi என்பது மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வங்கியியல் கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன், சமுர்த்தி திட்டத்தின் வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நவீன வசதிகள் படைத்த கட்டமைப்பினூடாக, அனுகூலம் பெறுவோருக்கு பரந்தளவு வங்கியியல் சேவைகளை வழங்கி வலுவூட்டப்படுகின்றது.

