Apr 27, 2025 - 08:30 AM -
0
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததுடன் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.
இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொள்கலன் முனையத்தில் இரசாயன பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே வெடி விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவலாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் உத்தரவிட்டுள்ளார்
ஈரான்-அமெரிக்கா, ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில் பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

