உலகம்
உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறிய 12 கோடி பேர்!

Jun 13, 2025 - 09:56 AM -

0

உலகம் முழுவதும் அகதிகளாக வெளியேறிய 12 கோடி பேர்!

போர், வன்முறை, சித்ரவதை காரணமாக உலகம் முழுவதும் வீடுகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 12 கோடியே 21 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன் உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 12 கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இது இரட்டிப்பாகி உள்ளது. 

கடந்த ஆண்டு இறுதியில் இருந்த நிலவரப்படி, உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து, 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. 

இந்த எண்ணிக்கை, பல ஆண்டுகளாக அகதிகளாக மாறியவர்கள் எண்ணிக்கை ஆகும். அவர்களில் சிலர் கடந்த ஆண்டு வீடுகளுக்கு திரும்பிய போதிலும், புதிதாக வேறு சிலர் வெளியேறி விட்டனர். 

ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ குடியேறும் நோக்கத்தில் பலர் வெளியேறியதாக பணக்கார நாடுகளில் ஒரு கருத்து நிலவுகிறது. 

ஆனால், தங்கள் நாட்டின் எல்லையை தாண்டிய மூன்றில் இரண்டு பங்கு பேர் இன்னும் அண்டை நாடுகளில்தான் உள்ளனர். 

அதிகபட்சமாக, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1 கோடியே 40 லட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர். 

அடுத்தபடியாக, சிரியா நாட்டில் 1 கோடியே 35 லட்சம் பேரும், ஆப்கானிஸ்தான் நாட்டில் 1 கோடி பேரும், உக்ரைன் நாட்டில் 88 லட்சம் பேரும் அகதிகளாக மாறினர் என தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05