Oct 2, 2025 - 07:08 PM -
0
இந்திய வர்த்தக சம்மேளனம் (ICC) ஏற்பாடு செய்த 3வது வளர்ந்து வரும் ஆசிய வங்கியியல் மாநாடு மற்றும் விருதுகள் 2025 இல் கொமர்ஷல் வங்கியானது மூன்று மதிப்புமிக்க விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் வளர்ச்சியில் சிறந்த செயல்திறன் மற்றும் இலாபத்தன்மையில் சிறந்த செயல்திறன் ஆகிய விருதுகளைப் பெற்றதுடன் மேலும் இலங்கையில் சிறந்த வங்கிக்கான இரண்டாம் இடத்தையும் தனதாக்கிக் கொண்டது. இதன் மூலம் வங்கியானது இந்த நிகழ்வில் குறிப்பிடத்தக்க மூன்று வெற்றிகளைப் பெற்றது. பிராந்திய நிதித் துறையில் வங்கியின் வலுவான செயல்திறன், மீள்தன்மை மற்றும் தலைமைத்துவம் என்பவற்றை பிரதிபலிக்கும் இவ்விருதுகள் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள லீ மெரிடியனில் வைத்து வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தனிநபர் வங்கிப்பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் திரு. இராமச்சந்திரன் சிவஞானம் கலந்து கொண்டார். இவ் விருது வழங்கும் விழாவில் பூட்டான், இலங்கை, நேபாளம், மியன்மார், பங்களாதேஷ் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள நிதி நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இலாபம், வளர்ச்சி மற்றும் சொத்துக்களின் தரம் போன்ற முக்கிய நிதிசார் குறிகாட்டிகளின் அளவுகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (PwC) மற்றும் புகழ்பெற்ற வங்கித் துறை வல்லுநர்களைக் கொண்ட நடுவர் குழுவினால் மேற்கொள்ளப்படும் துறைசார் மதிப்பீட்டின் அடிப்படையில் இவ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

