Oct 9, 2025 - 06:03 PM -
0
சந்தைப்படுத்தல் துறையைப் பொறுத்தவரையில் இலங்கையின் அதியுச்ச அமைப்பாகத் திகழ்ந்து வருகின்ற இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிறுவனம் (Sri Lanka Institute of Marketing - SLIM), பிரசித்தி பெற்ற World Marketing Forum (WMF) நிகழ்வை முதல்முறையாக இலங்கை ஏற்பாடு செய்கின்றமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. நாட்டைப் பொறுத்தவரையில் மிகவும் தீரமானம்மிக்கவொரு நிகழ்வை இது குறித்து நிற்பதுடன், உலகத்தரம்வாய்ந்த மாநாடுகள், சர்வதேச சிந்தனைத் தலைமைத்துவம், மற்றும் நாடு கடந்த ஒத்துழைப்பு ஆகியவற்றின் நம்பிக்கைக்குரிய மற்றும் ஆற்றல்மிக்க மையமாக இலங்கையின் நன்மதிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அமர்வு 2025 நவம்பர் 11 முதல் 16 வரை கொழும்பில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளதுடன், ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்கா, மற்றும் ஓசானியா ஆகியவற்றின் மத்தியில் 50 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புக்களிலிருந்து சிரேஷ்ட சந்தைப்படுத்தல் தொழில் வல்லுனர்கள், தொழில்துறை தலைவர்கள், சர்வதேச கூட்டுத்தாபனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், மற்றும் முதலீட்டாளர்களை ஒரே மேடையில் இடம்பெறச் செய்யவுள்ளது.
இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து SLIM ன் தலைவர் பேராசிரியர் (கலாநிதி) ஜயந்த தேவசிறி அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
“இலங்கையில் முதல்முறையாக World Marketing Forum நிகழ்வை ஏற்பாடு செய்வது இத்துறையில் எமது தேசத்தின் ஆற்றல்கள், உட்கட்டமைப்பு, மற்றும் நிபுணத்துவத்திற்கு சான்று பகருகின்றது. இந்நிகழ்வானது இலங்கையின் புகழை சர்வதேச மட்டத்திற்கு மேம்படுத்துவதற்கு மாத்திரமன்றி, சர்வதேசரீதியில் மிகச் சிறந்த நடைமுறைகளை கைக்கொள்வதற்கு உள்நாட்டு சந்தைப்படுத்தல் சமூகத்திற்கு உத்வேகம் அளிக்கும் அதேசமயம், எமது சொந்த புத்தாக்கங்கள் மற்றும் வெற்றி வரலாறுகளை உலகிற்கு பெருமையுடன் எடுத்துக் காட்டுவதற்கு இடமளிக்கின்றது.”
இச்சாதனையை தேசிய வெற்றி மற்றும் கலாச்சார சாதனை என விபரித்த இச்செயற்திட்டத்தின் தலைவர் திரு. அசங்க பெரேரா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
“இச்சர்வதேச மேடையை இலங்கைக்கு கொண்டுவருவதையிட்டு பெருமை கொள்கின்றோம். தொழில் நிபுணத்துவ ஒன்றுகூடல் என்பதற்கு அப்பால், எமது நாட்டின் செழுமைமிக்க கலாச்சாரம், இங்குள்ள மகத்தான வளர்ச்சி வாய்ப்புக்கள் ஆகியவற்றின் சிறப்பினை இந்த அமர்வு ஒட்டுமொத்த உலகிற்கும் காண்பிக்கும். சர்வதேச அரங்கில் இலங்கையின் தனித்துவமான பலங்களை எடுத்துக்காட்டுவதற்கு இது சிறந்த வாய்ப்பாகும்.”
இதனை ஏற்பாடு செய்வதற்கு நாடுகளுக்கிடையில் சுழற்சி அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுவதாலும், குறைந்தது அடுத்த 70 ஆண்டுகளுக்காவது எமது நாடு WMF அமர்வை மீண்டும் நடாத்துவதற்கு வாய்ப்பு கிடையாது என்பதாலும், விரிவான சர்வதேச பிரசன்னத்தைக் கொண்ட அரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக இலங்கைக்கு இதன் வருகை காணப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில், அதன் வலுவான சந்தைப்படுத்தல் தொழில்துறை, பலம்மிக்க நிகழ்வு ஏற்பாட்டு ஆற்றல்கள், மற்றும் சர்வதேசரீதியாக இத்தொழில்துறையை மேம்படுத்துவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதற்கு வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் கிடைக்கும் வாய்ப்பாக இது காணப்படுகின்றது.

