Nov 8, 2025 - 03:12 PM -
0
இளஞ்சிவப்பு முச்சக்கரவண்டிகளை ஆண்கள் செலுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில் பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு முச்சக்கரவண்டி சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பின் படி ரூபாய் 1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் கடந்த 8 மார்ச் 2025-ஆம் திகதி தமிழ்நாடு முதல் அமைச்சரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இளஞ்சிவப்பு முச்சக்கரவண்டிகளை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் செலுத்தி வருவதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக சமூக நலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதில் சில ஆண்கள் செலுத்துவதாக கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இளஞ்சிவப்பு முச்சக்கரவண்டிகளை பெண்கள் மட்டுமே இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு முச்சக்கரவண்டிகள் இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும் ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூகநலத்துறையால் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கி வருவது தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது போல் இளஞ்சிவப்பு முச்சக்கரவண்டிகளை ஆண்கள் இயக்கினால் அவை பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஐகடே எச்சரித்துள்ளார்.

