Dec 2, 2025 - 06:35 PM -
0
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மஹியங்கனை ஆதார வைத்தியசாலையை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதற்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மகாவலி கங்கைக்கு அருகில் வைத்தியசாலை அமைந்துள்ளதால், வைத்தியசாலை வளாகத்தினுள் பெருமளவான வண்டல் மண் மற்றும் சேறு படிந்துள்ளமையினால் சுத்தம் செய்யும் பணிகள் சற்றுச் சிரமமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாளை (03) வெளிநோயாளர் பிரிவு, ஆரம்ப சிகிச்சைப் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகிய சேவைகளை முழுமையாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அனர்த்தம் ஏற்பட்ட நேரத்தில் வைத்தியசாலையில் தங்கியிருந்த நோயாளர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், வெள்ளம் காரணமாக வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறிப்பிட்ட அளவிலான மருந்துகள்ப் பயன்படுத்த முடியாத வகையில் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

