Dec 7, 2025 - 07:48 AM -
0
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவம் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரம், அநுராதபுரம் மாவட்டத்தின் மகாவிலச்சிய, மகாகனதராவ, இராஜாங்கனை நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தின் தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர மற்றும் பதுளை மாவட்டத்தின் சொரபொர ஆகிய நீர்த்தேக்கங்கள் இதில் அடங்குவதாக அவர் கூறினார்.
மேலும், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் வினாடிக்கு 6476 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் வினாடிக்கு 1164 கன அடி நீரும் கலா ஓயாவிற்கு விடுவிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்தாலும், வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், அந்த நீர்த்தேக்கங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பொறியியலாளர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் நீர்ப்பாசனத் திட்டங்களின் கட்டுமானங்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால், அந்த சேதங்களுக்கான தற்காலிக புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வலது கரை கால்வாய் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்றுடன் நிறைவடையும் என்றும், அதனூடாக அந்த நீர்த்தேக்கத்தின் மூலம் பயன்பெறும் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, எலஹர யோத கால்வாயின் புனரமைப்புப் பணிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் பாதுகாப்புப் படையினர் மற்றும் விவசாய அமைப்புகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சி மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைப் பொறுத்து இதன் கட்டுமானக் காலம் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மற்றைய நீர்ப்பாசனக் கட்டுமானங்களின் புனரமைப்புப் பணிகளும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார கருத்துத் தெரிவிக்கையில், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான பிரதான அளவீட்டு நிலையங்களை கருத்தில் கொள்ளும்போது, அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 30-35 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பத்தேகம மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் வெள்ள மட்டங்களைக் கருத்தில் கொள்ளும்போது, தந்திரிமலை மல்வத்து ஓயாவில் நீர்மட்டம் சாதாரண மட்டத்தை விட சற்று அதிகமாக இருந்ததாகவும், அதுவும் தற்போது குறைந்து வருவதாகவும் பொறியியலாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இது வெள்ள நிலைமை அல்ல என்றும், நீர்த்தேக்கங்களில் நீரை குறைக்க நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதால் ஏற்படும் நிலைமை என்றும் சுட்டிக்காட்டிய பொறியியலாளர், தற்போது பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.
இதில் தெதுரு ஓயா, இராஜாங்கனை, நாச்சதூவ மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் ஏனைய நடுத்தர நீர்த்தேக்கங்களினது வான் கதவுகளைத் திறந்து நீர்மட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

