Feb 20, 2026 - 11:23 AM -
0
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி முடிவை அறிவிக்காமல் தே.மு.தி.க. காலம் தாழ்த்தி வந்தது. ஒரே நேரத்தில், ஆளுங்கட்சியான தி.மு.க.வுடனும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடனும் கூட்டணி பேசி வந்தது. இரு கட்சிகளிடமும் '25 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும்' என்ற கோரிக்கையுடனேயே பேச்சு வார்த்தையை ஆரம்பித்தது.
ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே 'இரட்டை இலக்க தொகுதிகள் தரமுடியாது' என்று முதலிலேயே மறுத்துவிட்டன. தி.மு.க. தரப்பில் 6 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும், அதிமுக தரப்பில் 8 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆனாலும், யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல், மதில் மேல் பூனையாக அமர்ந்துகொண்டு, தே.மு.தி.க. மௌனம் காத்து வந்தது. முதலில் ஜனவரி 9 ஆம் திகதி கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
அடுத்து பிப்ரவரி 3 ஆம் திகதி தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிப்பதாக சொன்னார். ஆனால், குறிப்பிட்ட திகதிகளில் கூட்டணி முடிவை எதுவும் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவில்லை. மாறாக, 'உரிய நேரத்தில் கூட்டணி முடிவை அறிவிப்பேன். நமது கூட்டணி வெற்றி கூட்டணி' என்று கூறிவிட்டு சென்றார்.
இதனால், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வி நீடித்து வந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், நேற்று (19) காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதை உறுதி செய்தார்.
ஆனால், அதன் பிறகு பேட்டியளித்த அவர், ''தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசப்பட்டுவிட்டது. எத்தனை என்பதை தி.மு.க. தலைமை அறிவிக்கும்'' என்று கூறிவிட்டு சென்றார்.

