Dec 2, 2025 - 04:18 PM -
0
டித்வா சூறாவளி புயலால் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜேர்மன் குடியரசின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கான ஜேர்மனி கூட்டாட்சிக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரான கலாநிதி பெலிக்ஸ் நியூமன் அவர்களை இன்று (02) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக எழுந்துள்ள பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர். தற்போதைய பேரிடர் நிலைமை, அதன் பின்னர் ஏற்படக்கூடிய பேரிடருக்குப் பிந்தைய நிலைமை மற்றும் தொற்றுநோய் நிலைமையை கையாள ஜேர்மன் குடியரசால் இந்நேரத்தில் இலங்கைக்கு பெற்றுத் தர முடியுமான அதிகபட்ச பங்களிப்பைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கௌரவமாக கேட்டுக் கொண்டார்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் வைத்தியசாலைகளின் சேவைகளைப் பேணிச் செல்வதற்கும், சேதமடைந்த ரயில் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வீதிப் போக்குவரத்து கட்மைப்புகளை புனர்நிர்மாணம் செய்வதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது ஜேர்மனிடம் உதவி கோரினார். குறிப்பாக, ரயில் சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து விசேட பங்களிப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார்.

