Oct 13, 2026 - 03:26 PM

2026 ஆம் ஆண்டின் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும் படைப்பாற்றலையும் மறக்க முடியாத அனுபவங்களையும் வழங்கும் நோக்கில், நைன்வெல்ஸ் மருத்துவமனை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து கொண்டாடியது.
சிறுவர்களையும் சுகாதாரப் பணியாளர்களையும் ஒன்றிணைத்த இந்நிகழ்வு, மகிழ்ச்சியும் பொழுதுபோக்கும் நிறைந்த பல்வேறு அர்த்தமுள்ள செயற்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. முக ஓவியம், குதித்து விளையாடுவதற்கான பலூன் விளையாட்டு அரங்கு (Bouncer Castle), ஓவியம் வரைதல், நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான திரைப்படத் திரையிடல், மாயாஜால நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றன. அத்துடன், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட “லஸ்ஸன லோகயக லமா சித்தம” (Lassana Lokayaka Lama Siththama) ஓவியப் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட ஓவியங்களின் சிறப்புக் கண்காட்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் கலந்துகொண்டு, சிறுவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதுடன், நிகழ்விற்கும் மேலும் சிறப்புச் சேர்த்தார்.
இலங்கையின் அரச மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், சிறுவர்களின் நலன், மகிழ்ச்சி மற்றும் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் பொதுவான நோக்குடன் நைன்வெல்ஸ் மருத்துவமனையும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையும் ஒன்றிணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தன.
நைன்வெல்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரையில், இவ்விழாவானது வெறும் நிகழ்வாக மட்டும் அமையவில்லை. சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கும், சிறுவர்களின் முகங்களில் புன்னகையை மலரச் செய்து, அவர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இதன் மூலம், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்குப் பங்களிப்புச் செய்யும் தனது அர்ப்பணிப்பையும் மருத்துவமனை மீண்டும் உறுதிப்படுத்தியது.

































