Oct 16, 2026 - 10:06 AM
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
By மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்

கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி நேற்று (15) நடைபெற்ற ஆயிரக்கணக்கான அடியார்களின் தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த 09 ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வந்தது.
கடந்த 11 ஆம் திகதி பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்திலிருந்து அம்பாள் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் திங்கட்கிழமை அம்பாளின் ஊர்காவல் திருஉலா நடைபெற்றது.
உற்சவகால பிரதமகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ குமாரலிங்கம் பூசகர் தலைமையிலான பூசகர்களினால் இந்த சக்தி விழா சிறப்பாக நடாத்தப்பட்டது.
கடந்த 13 ஆம் திகதி காலை அன்னையின் சக்தி மஹா யாகம் நடைபெற்றதுடன் பிற்பகல் நோற்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் மாலை கடல்குளிப்பு நடைபெற்றது.
நேற்று காலை சக்தி பூஜை நடைபெற்று தேவாதிகள் சகிதம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தீமிதிப்பு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் பங்குகொண்டதுடன் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் உற்சவத்தில் கலந்துகொண்டனர்.

































