Oct 21, 2026 - 11:54 AM

இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் ஹட்ச் ஸ்ரீலங்கா [HUTCH Sri Lanka], உலகின் Fortune 500 நிறுவனங்களில் ஒன்றான CK Hutchison Holdings நிறுவனத்தின் தொலைத்தொடர்பு பிரிவாகும். இந்நிறுவனம் தனது நாடளாவிய சில்லறை விற்பனை நிலையங்களை நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ், காலியில் புதிய ஹட்ச் சிக்னேச்சர்+ [HUTCH Signature+] விற்பனை நிலையத்தை திறந்துள்ளது.
இலங்கையின் சில்லறை விற்பனைத் துறையில் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிக்னேச்சர்+ கருத்தாக்கத்தின் கீழ், கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அந்த வரிசையில் தற்போது காலி விற்பனை நிலையமும் இணைந்துள்ளது.
வழக்கமான விற்பனை நிலையங்களின் வடிவமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ஹட்ச் சிக்னேச்சர்+ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் உட்புற அலங்காரங்களில் சுமார் 90 சதவீதம் மீள்பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
மீள்பயன்படுத்தப்பட்ட மரப்பெட்டிகளின் மரப்பலகைகள், சுழற்சி விதைகள், Kumburu விதைகள், பாக்கு இலைகள் மற்றும் வாழை மட்டைகள் உள்ளிட்ட இயற்கை மற்றும் மீள்பயன்பாட்டு பொருட்கள், நீடித்த பயன்பாட்டுக்கான நவீன அலங்காரப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேற்பரப்பிலும் அலங்காரப் பொருளிலும் அவற்றை உருவாக்கிய உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் உழைப்பின் அடையாளம் காணப்படுகிறது. இதன் மூலம் சுழற்சிப் பொருளாதாரக் கொள்கையை நடைமுறையில் கொண்டு வருவதுடன், உள்ளூர் சமூகங்களுக்கும் நேரடியான பொருளாதாரப் பயன் கிடைக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிக்னேச்சர்+ விற்பனை நிலையங்களின் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ள காலி நிலையமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி இயங்குகிறது. மேலும், பயன்பாட்டுக் காலம் முடிவடைந்த மின்னணு சாதனங்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கான மின்னணுக் கழிவு (E-waste) சேகரிப்பு வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், பொருட்களின் மீள்பயன்பாடு முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணுக் கழிவு முறையான அகற்றல் வரை, நிலைத்தன்மையின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் முழுமையான அணுகுமுறையை ஹட்ச் சிக்னேச்சர்+ விற்பனை நிலையங்கள் முன்னெடுக்கின்றன.
மேலும், வடிவமைப்பைத் தாண்டி, காலி ஹட்ச் சிக்னேச்சர்+ விற்பனை நிலையம், வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தவுடன், ஒவ்வொரு அம்சத்திலும் நிதானமாகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்பட்ட கைவினைப் பணியின் நேர்த்தியை உணர முடியும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பார்வையிட்டு தெரிவு செய்வதுடன், தாங்கள் வாழும் சூழலின் நலனையும் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில், பார்வையாளர்கள் சௌகரியமாக நேரத்தைச் செலவிட முடியும்.
இலங்கையில் ஹட்ச் நிறுவனத்தை இயக்கி வரும் CK Hutchison Group, உலகளாவிய சில்லறை வர்த்தகத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. அதன் A.S. Watson வர்த்தக நாமத்தின் மூலம் சுகாதாரம் மற்றும் அழகுப் பராமரிப்புத் துறையில் உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனைச் சங்கிலியாகவும் அது விளங்குகிறது. உலகளவில் 17,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களை CK Hutchison Group நடத்தி வருகிறது. அவற்றில் ஏற்கனவே 4,000- க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் பசுமைச் சில்லறை விற்பனை முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேவேளை, தனது எரிசக்திப் பிரிவின் ஊடாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் முக்கிய நிறுவனமாகவும் CK Hutchison Group செயல்பட்டு வருகிறது. உலகளவில் இந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வலையமைப்புகளுக்குத் தேவையான மின்சாரத்தில் சுமார் 65 சதவீதம் ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறப்படுகிறது.
உலகின் ஏழு கண்டங்களில் ஆறு கண்டங்களில், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் CK Hutchison Group பல்வேறு துறைகளில் தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனால், நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் நிலைத்தன்மைக்கான அணுகுமுறை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் (UN Sustainable Development Goals) இணைந்த வகையில் அதன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா, காலி விற்பனை நிலையம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் “காலி மக்களுக்காக நாம் திறந்துள்ள புதிய சிக்னேச்சர்+ விற்பனை நிலையம், இதுவரை நாம் முன்னெடுத்தவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு நாம் வழங்கும் முக்கியத்துவம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமாக காலி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையுடன் மிகவும் நெருக்கமாகப் பொருந்துகிறது. காலியில் தொல்பொருள் மரபைப் பாதுகாப்பதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று துணையாக அமையும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. இது இரு அம்சங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இலங்கை ஏற்கனவே 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலையை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. எமது குழுமத்தின் உலகளாவிய அனுபவங்களிலிருந்து கிடைத்த சிறந்த நடைமுறைகளை இலங்கையிலும் செயல்படுத்தி, நாட்டின் இந்த இலக்கை அடைவதற்கு எம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகிறோம்.
மக்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு நிலைத்தன்மை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இவற்றை மக்கள் நேரடியாகக் காணவும், அவற்றின் பயன்களைப்
புரிந்துகொள்ளவும், தமது வாழ்விலும் நடைமுறைப்படுத்திக் கொள்ளவும் முடியும் வகையில் எளிமையான முறையில் செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் நீண்டகாலத்திற்கு நிலையானதும் நேர்மறையானதுமான மாற்றத்தை
ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.”
































