Oct 26, 2026 - 06:59 PM

முகாமைத்துவ பணிப்பாளர் சியொங் ஹொங்ஃபெங், காணி அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் டியான் செங், காணி அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதி பொது முகாமையாளர் ஷலக விஜேரட்ன.
[15 ஒக்டோபர் 2026, கொழும்பு, ஸ்ரீ லங்கா]: நகர அபிவிருத்தி, நகர தகவல் தொழினுட்பவியல், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கல்வித்துறைக்கும் தொழிற்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, CHEC Port City Colombo (Pvt) Ltd. மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் பிரிவு ஆகியன புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 2026 செப்டெம்பர் 29 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இவ்வொப்பந்தம், கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி மற்றும் அதன் திட்டமிடல் செயல்முறைகளில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மிகவும் நெருக்கமாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
இந்தப் பங்காண்மையின் பிரதான எதிர்பார்ப்பாக, மாணவர் முன்னேற்றம் அமைந்துள்ளது. இந்த உடன்படிக்கை, கட்டமைப்பு ரீதியான தொழில்சார் பயிற்சிகள், தொழில்துறை அனுபவம், கல்விசார் திட்டங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிவகுப்பதுடன், கொழும்பு துறைமுக நகரத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில் கண்காட்சிகள் போன்ற முயற்சிகள் ஊடாக நீண்டகாலப் பங்களிப்புகளுக்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றது.
CHEC Port City Colombo (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் சியொங் ஹொங்ஃபெங் கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு பிரதான அபிவிருத்தியாளராக, பல்கலைக்கழகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதில் நாம் பெருமதிப்பைக் காண்கிறோம். ஏனெனில் நகர அபிவிருத்தி என்பது தனித்து முன்னெடுக்கப்படும் ஒரு விடயமல்ல. இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் ஒரு பங்காண்மையாக இதை நாம் பார்க்கிறோம். மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒரு பெரிய நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடைமுறை அம்சங்களை மிகவும் நெருக்கமாக அணுகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அத்துடன், நகரங்களின் எதிர்காலம் குறித்து ஆய்வுகளில் ஈடுபடும் நபர்களுடன் இணைந்து பணியாற்றும் நன்மையை கொழும்பு துறைமுக நகரம் பெறுகின்றது. இலங்கையின் திறமைகளை உலகிற்கு மேலதிகமாக வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக கொழும்பு துறைமுக நகரத்தைக் கட்டியெழுப்புவதுடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் அனைத்துத் துறைகளிலும் இத்தகைய பரிமாற்றத்தை மேலும் விரிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.
வெற்றிகரமாக நடாத்தப்பட்ட Smart City Ideathon போன்ற திட்டங்களின் ஊடாக இடம்பெற்ற மாணவர் பங்கேற்புகள் உள்ளடங்கலாக, கொழும்பு துறைமுக நகரத்திற்கும் நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறைக்கும் இடையே நிலவும் தற்போதைய உறவை அடிப்படையாகக் கொண்டு இவ்வொப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான நகர அபிவிருத்திச் சவால்களை மாணவர்கள் எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கான வாய்ப்பை அவ்வாறான முயற்சிகள் வழங்கின. தற்போதைய புதிய ஒப்பந்தம், இந்த உறவை ஆராய்ச்சி, கல்விசார் பரிமாற்றம், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்துறை ஈடுபாடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு கட்டமைப்பு ரீதியான திட்டமாக மேலும் விரிவுபடுத்துகிறது.
இவ் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், நகர தகவல் தொழினுட்பவியல் மற்றும் ஸ்மார்ட் சிட்டி அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை இரு தரப்பும் ஆராயும். அத்துடன், உருவாகி வரும் நகரச் சவால்கள் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்திக்கு தொடர்புடைய துறைகளுடன் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் திட்டங்கள் சீரமைக்கப்படக்கூடும்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் பிரிவின் தலைமை அதிகாரி கலாநிதி. ரிஸ்வி நூர்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “ஸ்மார்ட் நகர அபிவிருத்தியை நோக்கி இலங்கை புதிய வழிகளைத் தேடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், தொழினுட்ப ரீதியில் மேம்பட்டது மட்டுமன்றி, எமது உள்ளூர் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நகரப் பிண்ணனிகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளை ஆராய்வதற்கு இப்பங்காண்மை ஒரு சரியான வாய்ப்பை வழங்குகின்றது. நகர தகவல் தொழினுட்பவியல் மற்றும் திட்டமிடலை, நடைமுறை அபிவிருத்தி அனுபவத்துடன் இணைப்பதன் மூலம், இலங்கை முழுவதிலும் உள்ள நகரங்களின் எதிர்கால அபிவிருத்திக்கு வழிகாட்டக்கூடிய, சூழலுக்குப் பொருத்தமான அறிவையும் புத்தாக்கமான தீர்வுகளையும் உருவாக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
எதிர்காலத்தில் கொழும்பு துறைமுக நகரத்திற்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் இடையே விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கும் இவ்வொப்பந்தம் வலுவான அடித் தளத்தை ஏற்படுத்துகின்றது. இது நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறைக்கு அப்பால் விரிவடைந்து, பல்கலைக்கழகம் முழுவதிலும் உள்ள மாணவர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், தொழிற்துறை அனுபவத்தைப் பெறுவதற்கும், கொழும்பு துறைமுக நகரத்தில் இயங்கும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்குமான வாய்ப்புகளை உருவாக்கும். இத்தகைய வாய்ப்புகள், இலங்கை மாணவர்கள் அத்தகைய அனுபவங்களைப் பெறுவதற்காக நாட்டிற்கு வெளியே செல்ல வேண்டிய தேவையின்றி, சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்முறை அனுபவங்களை இங்கிருந்தவாறே பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கின்றன.
கொழும்பு துறைமுக நகரத்தைப் பொறுத்தவரை, இப்பங்காண்மை வெறும் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் தொகுப்பாக மாத்திரம் இயங்காது, அதைத் தாண்டிய ஒரு பரந்த தொலைநோக்கைப் பிரதிபலிக்கின்றது. ஒரு புதிய நகரம் வடிவம் பெறும்போது, அதன் நீண்டகால மதிப்பானது அதற்குள் உருவாகும் வர்த்தகங்கள், நிறுவனங்கள், அறிவு மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் தங்கியிருக்கும். திட்டத்தின் அபிவிருத்தி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மொரட்டுவ பல்கலைக்கழகத்துடனான இப்பங்காண்மையானது கொழும்பு துறைமுக நகரம் அத்தகைய தொடர்புகளைக் கட்டியெழுப்பும் வழிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு பார்வையிடவும் www.portcitycolombo.lk. முதலீட்டு வசதி வாய்ப்பளிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் விடயங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் www.portcitycolombo.gov.lk.

































