Nov 10, 2026 - 10:08 AM
By மன்னார் நிருபர் லெம்பட்
By மன்னார் நிருபர் லெம்பட்

மன்னார் மறை மாவட்டத்தில் இறை பணியாற்றி, தமது வாழ்வையும் உழைப்பையும் திரு. அவையின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்து, இறைவனடி சேர்ந்த ஆயர், அருட்பணியாளர்கள் மற்றும் துறவியர்களை நினைவு கூறும் இரங்கல் சிறப்புத் திருப்பலி, நேற்று (09) மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில், மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குருமுதல்வர் வணக்கத்துக்குரிய அருட்பணி கிறிஸ்து நேசரெட்ணம் அடிகளார், மறைமாவட்ட அருட்பணியாளர்கள், மன்னார் மறை மாவட்டத்தில் பணியாற்றிவரும் பல்வேறு துறவற சபைகளைச் சேர்ந்த துறவிகள் மற்றும் பெருந்திரளான இறைமக்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.
மறைமாவட்டத்தின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், இறை மக்களின் நலனுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்துச் சேவையாற்றிய மறைந்த ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியர்களின் இறை பணிகளையும், தியாக வாழ்வையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து, அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இத்திருப்பலி பக்தி பூர்வமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தலைமுறை தலைமுறையாக மன்னார் மறைமாவட்டத்தின் விசுவாச வாழ்வுக்கும், நற்செய்திப் பணிக்கும் அடித்தளமிட்டுச் சென்ற இறை அழைப்பின் சாட்சிகளான இவர்களின் அர்ப்பண வாழ்வு, திரு. அவைக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் என்றும் வழிகாட்டியாக அமையும் என்பதை இந்நிகழ்வு மீண்டும் நினைவூட்டியது.

































