Nov 16, 2026 - 05:36 PM

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) முற்பகல் நடைபெற்றது.
காலநிலை மாற்றங்களின் தற்போதைய நிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளால் ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது முகம்கொடுத்துள்ள வெப்பமான காலநிலை மற்றும் அதிக மழைவீழ்ச்சி நிலைமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள எதிர்வுகூறல் தரவுகளை மேலும் பகுப்பாய்வு செய்து, இதன் மூலம் ஏற்படக்கூடிய சமூக தாக்கம் குறித்து எதிர்வுகூறல் அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இதன் மூலம் குடிநீர், மின்சாரம், உணவுத் தேவைகள் போன்றவற்றை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை கண்டறிவது தொடர்பில் நிலைபேறான தீர்வுகளை வழங்குவதற்காக தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை புதுப்பித்துக் கொள்ள முடியுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
குறித்த எதிர்வுகூறல் அறிக்கையைத் தயாரித்ததன் பின்னர் கள அதிகாரிகளை அழைத்து இது குறித்து மேலும் கலந்துரையாட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

































