Nov 16, 2026 - 05:58 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கம் தனது 69 ஆவது வயதில் கடந்த 14 ஆம் திகதி நள்ளிரவு அவரது இல்லத்தில் காலமான நிலையில் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று (16) இறுதி கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வல்வெட்டித்துறை சந்தியில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது பலநூற்றுக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதில் குறிப்பாக இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன், பழ.நெடுமாறனின் செயலாளர், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்கள், மூத்த அரசியல் தலைவர்களான வீ. ஆனந்தசங்கரி , சிறிதுங்க ஜெயசூரிய, வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அவரது புகழுடல் தகனக்கிரியைக்கு ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
சிவாஜிலிங்கம் சிலவருடங்களாக சிறுநீரக செயலிழப்பு நோய் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கடுமையான உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் பருத்தித்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் காலமானார்.
வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் போராளியாக இருந்து, தனது நீண்ட அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவாகவும் பொறுப்பேற்று, சேவையாற்றி வந்தார்.
தமிழ் தேசிய அரசியல் களத்தில் சமரசமற்ற நிலைப்பாடுகளுக்காகவும், உரிமைப் போராட்ட குரல்களுக்காகவும் பரவலாக அறியப்பட்டவர்.
அவரது மறைவு தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

































