Nov 16, 2026 - 06:32 PM

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் ஆண்டு எதுவாக இருந்தாலும், அறிவிக்கப்பட்ட நிதிப் பரிசை அவ்வாறே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவிற்கு புதிய ஈட்டித் தொகுதி ஒன்றை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
எந்தவொரு போட்டியிலும் அத்தகைய வெற்றியைப் பெற்றால் பரிசுத் தொகையை வழங்கக்கூடிய வகையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான தேவையான அமைச்சரவைப்பத்திரங்களைத் தயாரித்து நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
விளையாட்டு வீரர்கள் வெற்றிபெற்றதன் பின்னர் மாத்திரம் பரிசுத் தொகைகள் தொடர்பில் விவாதிப்பதற்குப் பதிலாக, அதற்கு அவசியமான கொள்கைப் பின்னணியை உருவாக்குவது முக்கியம் என நம்புவதாக சுனில் குமார கமகே வலியுறுத்தினார்.
அத்துடன், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சினால் பாரிய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, சுமார் 1,900 பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை நாட்டுக்கு அழைத்து வந்து, விசேட திறமைகளைக் கொண்ட விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும், ஏற்கனவே பல விளையாட்டு வீரர்களுக்கு இத்தகைய வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே மேலும் தெரிவித்தார்.

































