Nov 16, 2026 - 07:42 PM

ஹொரணை - கொட்டாவ வீதியில் மத்தேகொடை சந்தைக்கு அருகில் சொகுசு கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று, மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதி இன்று (16) விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஐவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் இருவரது கால்களில் பாரியளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஹொரணையில் இருந்து கொட்டாவ நோக்கி அதிவேகமாகப் பயணித்த சொகுசு கார் ஒன்று, மத்தேகொடை சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி, கொட்டாவையில் இருந்து ஹொரணை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியுள்ளது.
விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

































