Jan 5, 2025 - 09:11 AM -
0
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இதனூடாக 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இன்றைய 3ஆவது நாளில் 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதோடு, அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 157 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து 162 என்ற இலக்கை நோக்கிய களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியை பதிவு செய்துகொண்டது.
இந்த தோல்வியின் ஊடாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினை இந்திய அணி இழந்துள்ளதோடு, அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.