Jan 9, 2025 - 07:58 AM -
0
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டி கடந்த 2009-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 47 டெஸ்ட் போட்டிகள், 198 ஒருநாள் போட்டிகள் மற்றும் 122 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அது தவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 13 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அந்த அணிக்காக சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் பெற்ற முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 13000-க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்து அந்த அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக திகழ்ந்து வந்தார்.
ஆனால் தற்போது 38 வயதாகும் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அந்த அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அவர் திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : சிறு வயதிலிருந்தே நியூசிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்கிற கனவை என்னிடம் இருந்தது. அந்த வகையில் எனது நாட்டிற்காக 367 போட்டிகளில் விளையாடியதில் மகிழ்ச்சி.
என்னுடைய அணியுடன் இணைந்து நான் விளையாட எந்த ஒரு போட்டியையும் மறக்க மாட்டேன். எனது அணியினருக்கும், பயிற்சியாளருக்கும் மிக்க நன்றி. என்னுடைய மனைவி குழந்தைகள் அனைவருக்கும் நன்றி. எனக்காக ஆதரவளித்த ரசிகர்களுக்கும் நன்றி என மார்ட்டின் கப்டில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தற்போது 38 வயதாகும் மார்ட்டின் கப்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்தாலும் உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் அவர் விளையாட முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.