Jan 14, 2025 - 09:44 AM -
0
பயிற்சியாளராக கம்பீர் தலைமையேற்ற பிறகு இந்திய அணி பல்வேறு தொடர்களில் தோல்வியை சந்தித்து வருகிறதும் அண்மையில் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவிய நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கிண்ணத்தை இழந்திருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது. இந்த நிலையில் பயிற்சியாளர் கம்பீருக்கும் அணி தலைவர் ரோகித் சர்மாவுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ரோகித் எடுக்கும் முடிவுக்கு கம்பீர் தடையாக இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியானது. இதனால் ரோஹித் சர்மா கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கம்பீரை மாற்ற வேண்டும் என்று பிசிசிஐ இடம் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வந்தது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, இந்த செய்தியை மறுத்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், இது முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும். பயிற்சியாளர் கம்பீருக்கும் அணி தலைவர் ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த ஒரு விரிசலும் இல்லை. அதை போல் பயிற்சியாளருக்கும் தேர்வுக்குழு தலைவர் அகார்கருக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று ராஜூவ் சுக்லா கூறியுள்ளார்.
இதேபோன்று ரோகித் சர்மா, கோலி ஆகியோர் பார்ம் அவுட் ஆனது குறித்து பேசிய ராஜீவ் சுக்லா, நீங்கள் எந்த விளையாட்டை விளையாடினாலும், ஒரு நேரம் சரியாக விளையாடுவீர்கள். ஒரு நேரம் சரியாக விளையாட மாட்டீர்கள். இது விளையாட்டில் நிச்சயம் நடக்கும். விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையில் இது ஒரு பகுதி. ரோகித் சர்மா தாம் எப்போது பார்மில் இல்லை என்பதை புரிந்து கொண்டாரோ அவரே சிட்னி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி விட்டார் என்று ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
இதேபோன்று சாம்பியன்ஸ் கிண்ண தொடருகான இந்திய அணி வரும் ஜனவரி 18 அல்லது 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் ராஜீவ் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் மற்றும் பி சி சி ஐ செயலாளர் ஆகியோர் அமர்ந்து அணியை முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறினார். சாம்பியன்ஸ் கிண்ண தொடர் வரும் 19 ஆம் திகதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் பிப்ரவரி 20 ஆம் திகதி பங்களாதேஷை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.