வணிகம்
அமானா வங்கி சுயவங்கிச் சேவை நிலையம் எலபடகமவில் திறப்பு

Jan 20, 2025 - 08:10 AM -

0

அமானா வங்கி சுயவங்கிச் சேவை நிலையம் எலபடகமவில் திறப்பு

அமானா வங்கி தனது 32ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை குளியாப்பிட்டிய பிராந்தியத்தில், எலபடகமவில் திறந்துள்ளது. இந்நிகழ்வில், அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால், வைப்புகள் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தின் உதவி உப தலைவர் அர்ஷாத் ஜமால்தீன், சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் தலைமை அதிகாரி அசீம் ராலி ஆகியோருடன், பிரதேசவாசிகள் மற்றும் வங்கியின் ஊழியர்களும் கலந்து கொண்டனர். எலபடகம சுய வங்கிச்சேவை நிலையம், 409/1, ஹம்சியாவத்த, எலபடகம, பன்னல எனும் முகவரியில் அமைந்துள்ளதுடன், பண மீளப்பெறுகைகள், பண வைப்புகள் மற்றும் கால்நடை, தேங்காய் மற்றும் நெற்செய்கையாளர்களுக்கு கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

தனது சுய வங்கிச்சேவை நிலையத்தின் விரிவாக்கம் தொடர்பில் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “எமது 32ஆவது சுய வங்கிச்சேவை நிலையத்தை திறந்துள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதனூடாக, எமது பிரத்தியேகமான வங்கியியல் மாதிரியை எலபடகம பகுதியைச் சேர்ந்த கால்நடை, தேங்காய் மற்றும் நெற்செய்கையாளர்களுக்கு வழங்கியுள்ளதுடன், வங்கியியல் அணுகலை மேம்படுத்தி வியாபாரங்களை விரிவாக்கம் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க நிதிச்சேவைகளை அணுகுவதற்கான பெருமளவு தேவையை இந்தச் சமூகம் கொண்டுள்ளது. எமது சுய வங்கிச்சேவை நிலையத்தினூடாக சௌகரியமான, எந்நேரமும் அணுகக்கூடிய, வாடிக்கையாளர்களுக்கு தமது நிதிகளை நிர்வகித்துக் கொள்ள வலுவூட்டுப்படுகின்றன. இந்த மாதிரியை நாட்டின் ஏனைய பல பாகங்களுக்கும் விஸ்தரிக்க எதிர்பார்க்கின்றோம். அதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்ய எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05