செய்திகள்
இளம் பெண் பாலியல் வன்கொடுமை - பரிசோதிக்க விசேட வைத்தியக் குழு

Apr 6, 2025 - 09:41 AM -

0

இளம் பெண் பாலியல் வன்கொடுமை - பரிசோதிக்க விசேட வைத்தியக் குழு

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் 31 ஆம் திகதி, பல்வலி மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற தனது தாயுடன் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு வந்த இளம் பெண், தன்னை பரிசோதித்த வைத்தியர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மூலம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார். 

அதன்படி, குறித்த இளம் பெண்ணை கடந்த 2 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அங்கு வழங்கப்பட்ட வைத்திய அறிக்கையில் குறித்த இளம் பெண் திருப்தி அடையவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவரை விசேட மருத்துவ குழுவால் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய வைத்தியர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது கடிதத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பும் சங்கத்தின் யாப்பை மீறியதற்காக, அவரை சங்கத்திலிருந்து நீக்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. 

இருப்பினும், அரசு வைத்தியசாலையில் நடந்த இந்த கடுமையான சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படு, சட்டம் உடனடியாக அமுல்படுத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கு தமது உச்சபட்ச ஆதரவை வழங்கும் என்றும், சுகாதார சேவையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று தமது சங்கம் நம்புகிறது என்றும், எதிர்காலத்தில் ஒரு வலுவான கொள்கை மற்றும் திட்டத்தை நிறுவுவதற்குத் தேவையான தலைமையை வழங்க சங்கம் தயாராக உள்ளது என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05