Jun 14, 2025 - 12:37 PM -
0
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான கயாடு லோகர், படப்பிடிப்பு தளத்தில் குதிரை சவாரி காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளார்.
‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கயாடு, தற்போது ‘STR 49’, ‘இதயம் முரளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், குதிரையிலிருந்து இறங்கும்போது தவறி விழுந்ததில் அவரது மார்பு பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மிகுந்த வேதனையுடன் கயாடு லோகர் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், உடல் முழுவதும் காயங்களுடன் மனமுடைந்த நிலையில் காணப்படும் அவர், நடந்த சம்பவத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், “என்ன ஆச்சு உங்களுக்கு? விரைவில் குணமாக வேண்டும்,” என்று ஆறுதல் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
2021 இல் கன்னட படமான ‘முகில்பேட்டே’ மூலம் அறிமுகமான இவர், மலையாளம், தெலுங்கு, மராத்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். ‘பதொன்பதாம் நூட்டாண்டு’ படத்தில் நாங்கேலி கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கயாடு, விரைவில் குணமடைந்து படப்பிடிப்பில் இணைவார் என அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.