Jun 23, 2025 - 04:47 PM -
0
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவுக்கு பதிலளிக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பேச்சாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி, அமெரிக்கா நேரடியாக போரில் ஈடுபட்டுள்ளதாகவும், ஈரானின் புனித பூமியை மீறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வலுவான மற்றும் இலக்கு நோக்கிய நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா கடுமையான, வருத்தமளிக்கும் மற்றும் எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்ளும் என்று இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேலும், ட்ரம்ப் ஒரு சூதாட்டக்காரர் என்றும், அவரால் போரை தொடங்க முடியும் என்றாலும், போரை முடிவுக்கு கொண்டுவருவது ஈரான் என்றும் அவர் கூறினார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, இது நாட்டின் இஸ்லாமிய அமைப்பை பாதுகாக்கவும், வழக்கமான ஆயுதப்படைகளுக்கு எதிர்சமநிலையை வழங்கவும் உருவாக்கப்பட்டது.
இது ஈரானின் முதன்மையான இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது, மேலும் ஈரானின் உயர்நாயகர் ஆயத்துல்லா அலி காமெனி உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுகிறது.
வெளிநாட்டு ஊடகங்கள், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் 190,000க்கும் மேற்பட்ட செயலில் உள்ள படையினர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த படை, குத்ஸ் படை (Quds Force) என்ற வெளிநாட்டு நடவடிக்கைகள் பிரிவு மூலம், கூட்டாளி அரசாங்கங்களுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.