உலகம்
பொய் செய்திகளை பரப்புவதாக டிரம்ப் குற்றச்சாட்டு

Jun 25, 2025 - 02:00 PM -

0

பொய் செய்திகளை பரப்புவதாக டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை என வௌியான செய்தி பொய்யானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

ஈரான் மீது ஒபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது. 

இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. 

இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. 

எனினும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்பே எடுத்து விட்டோம் என ஈரான் பதிலளித்து இருந்தது. 

ஆனால், அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரித்தது. தொடர்ந்து பதில் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. கத்தார் நாட்டிலுள்ள அமெரிக்க தளம் மீது தாக்குதல் நடத்தியது. 

இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வெற்றி பெற்றுள்ளது என கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, இராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார். அமெரிக்க விமானங்கள் வெற்றியுடன் தாக்குதலை நடத்தி முடித்து, திரும்பி விட்டன என்றார். 

ஆனால், அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் பாதுகாப்பு உளவு அமைப்பு நடத்திய தொடக்க மதிப்பீட்டில் தாக்குதல்கள் தற்காலிக பாதிப்புகளையே ஏற்படுத்தியது. இதனால், ஈரான் ஒரு சில மாதங்களே அணு திட்டத்தில் ஈடுபட முடியாமல் போகும் என்ற வகையில் தெரிவித்து இருந்தது. 

ஈரானின் அணு உலைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் நன்றாகவே உள்ளன என்றும் செறிவூட்டப்பட்ட யுரேனிய பொருட்கள் முன்பே பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானில் நடந்த இராணுவ தாக்குதல் வெற்றி என டிரம்ப் கூறி வந்த சூழலில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணு உலைகள் அழியவில்லை. அவை பாதுகாப்பாக உள்ளன என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால், டிரம்ப் ஆத்திரமடைந்துள்ளார். இது பொய்யான செய்தி என கூறியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் வெற்றியடைந்த ராணுவ தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இதனை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் இணைந்து முயற்சித்துள்ளன. 

ஈரானின் அணு உலைகள் முற்றிலும் அழிந்து விட்டன. சி.என்.என். மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் பொதுமக்களால் கடுமையாக சாடப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05